
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதலில் வரவேற்று பொன்னாடை அணிவித்த ஊராட்சி மன்ற தலைவர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில்குமார் களமிறங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கே.சி பட்டி, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, வடகவுஞ்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குப்பம்பட்டி பகுதியில் அவருக்கு திமுகவினரின் ஏற்பாட்டின் பேரில் பெண்கள் சாலையில் குத்தாட்டம் போட்டு வரவேற்பை அளித்த நிலையில், ஊர் பூசாரி ஒருவர் அருள் வாக்கு கூறுவதாக கூறி வேட்பாளரின் நெற்றியில் திருநீறு பூசி, தலை முடியை பிடித்து ஆட்டி அருள்வாக்கு கூறினார்.
இதனால் அதிர்ந்து போன செந்தில்குமார் அந்தப் பூசாரியின் காலில் விழுந்து ஆசி பெற்ற நிலையில், அவர் வெற்றி பெறுவார் என்று அருள்வாக்கு கூறுமாறு உடன் வந்த திமுக உடன்பிறப்புகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அருள்வாக்கிற்கு நேரம் எடுத்துக் கொண்டே போனதால், சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று ஒரு நிர்வாகி சொல்ல, பூசாரி தனது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில், பொன்னாடை அணிவித்த ஊராட்சி மன்ற தலைவரின் புகைப்படத்தை பதிவு செய்து, அவர் திமுகவிற்கு ஆதரவு வாங்கிவிட்டார் என்றும், பூசாரி அருள்வாக்கு கூறிவிட்டார் என்றும் முகநூலில் திமுகவினர் பதிவு செய்துள்ளனர்.
இதனைக்கண்டு பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகிய ஊராட்சி மன்ற தலைவி கண்டித்து பதில் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவினர் ஓட்டிச்சென்ற மு.க ஸ்டாலினின் விளம்பர படத்தை கிழித்தெறிந்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.