
சாலை ஓரத்தில் நின்ற பெண் ஒருவர், இரவு நேரத்தில் லிப்ட் கேட்டதை அடுத்து இளைஞர் ஒருவர் வண்டியை நிறுத்திய போது அவருக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27 வயதான திருப்போரூரை சேர்ந்த கணேஷ், வேலை காரணமாக சென்னை வந்து விட்டு சொந்த ஊருக்கு தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், மோட்டார் சைக்கிளில் மீண்டும் இரவு வந்து கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு அவரை வழிமறித்துள்ளார். பெண் ஒருவர் இரவில் தனியாக நின்று கொண்டிருக்கிறார் என்று இரக்கப்பட்டு அவரும் தனது வண்டியை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகள் 3 பேர் விரைந்து வந்து, கணேசிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த பறிக்க முயற்சி செய்தனர்.
தொடர்ந்து, பதறி போன கணேஷ் சத்தம் போட்டு கத்தியுள்ளார், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார், 25 வயதான முத்துக்குமார், 19 வயதான உதயகுமார், 19 வயதான பரசுபாலன், மற்றும் 25 வயதான முத்துலட்சுமியை கைது செய்தனர்.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்களிடம் ‘லிப்ட்’ கேட்பது போல நடிப்பதும், உடனே மறைந்திருக்கும் கூட்டாளிகள் கத்திமுனையில் வழிப்பறி செய்வதையும் முத்துலட்சுமி வழக்கமாக கொண்டு வந்துள்ளது தெரியவந்தது.