
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அவர் எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் வளைத்துக் கட்டி செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடிகர் அஜித் கடந்த ஆண்டு மே மாதம் தனது மனைவி ஷாலினுயுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா டெஸ்ட் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய சாலிகிராமத்தை சேர்ந்த பர்ஜானா என்ற பெண் ஆர்வக்கோளாறில், அஜித்தை வீடியோ எடுத்துள்ளார். இதனை சிசிடிவி வழியாக கண்காணித்த மருத்துவமனை நிர்வாகம் அவரது செல்போனை பறித்து வைத்துள்ளது.
பின்னர் அவரை எச்சரித்து மீண்டும் செல்போன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர் எடுத்த வீடியோ இணையதளத்தில் கசிந்து, அஜித்திற்கு கொரோனாவா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இதைத்தொடர்ந்து பர்ஜானாவை மருத்துவமனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதனால் மனமுடைந்த அப்பெண் அவரது மனைவி ஷாலினியிடம் முறையிட, அவர் மருத்துவமனைக்கு கொடுத்த அழுத்தம் காரணம் பர்ஜானாவை மீண்டும் பணியில் சேர்த்துள்ளது. ஆனால் அவருக்கு வேலை எதுவும் கொடுக்காமல் நிர்வாகம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு அவரை பணிநீக்கமும் செய்துள்ளது. ஆனால் அவர் வாங்கிய கடனை காரணம் காட்டி அவரது கல்வி சான்றிதழை வழங்காமல் இருந்து வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மீண்டும் நடிகை ஷாலினியிடம் பர்ஜானா மன்னிப்பு கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால் அவரோ அது நிர்வாகத்தின் நடவடிக்கை, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதனால் கடந்த ஓராண்டாக வாழ்வாதாரம் இன்றி தனது தாய் மற்றும் பெண் குழந்தையுடன் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அஜித்தை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பர்ஜானா, அஜித் மேலாளரான சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் பர்ஜானாவின் குழந்தையின் பள்ளிப்படிப்புக்காக அஜித்திடம் பீஸ் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன்பின் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கித்தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த பெண், தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் சுரேஷ் சந்திரா தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறி அவர் மீது வழக்கும் தொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பதிலளித்திருந்த சுரேஷ் சந்திரா, பர்ஜானா பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அஜித் காரணமல்ல. மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி கேமராவில் பார்த்துவிட்டு அவரை பணிநீக்கம் செய்து உள்ளதாக கூறினார்.
அதுமட்டுமல்லாது பர்ஜானாவின் மகளின் பள்ளி படிப்பு கட்டணத்தை செலுத்துவதற்கு அஜித் முன்வந்ததாகவும், ஆனால் அவர் அந்த பணத்தை பள்ளியில் நேரடியாக செலுத்த விடாமல் தன் கையில் கொடுக்க சொன்னதால் அது கடைசிவரை கொடுக்க முடியாமல் போனது கூறினார்.
மேலும் அவர் தன்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அவருடனான தொடர்பையும் துண்டித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.