தென்காசியில் அம்மன் சந்நிதித் தெருவில் உள்ள தொழுகைக் கட்டடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய மசூதி கட்டுவதற்கு தடையில்லாச் சான்று வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தென்காசி மாவட்டம் தென்காசியில், இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு எதிரில், அம்மன் சந்நிதி வீதியில், கோயிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் தென்காசி சார்பு அமர்வு நீதிமன்றத்தின் எதிர்ப் புறத்தில் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்ட பஜார் பள்ளிவாசல் என்று கூறப்படும் முஸ்லீம் தொழுகைக் கூடம் ஏற்படுத்தப் பட்டது.
கடந்த 1981-ஆண்டு கோவில் கட்டளைச் சொத்தை பரமாரித்து வந்த வேலாயுத பிள்ளை என்பவரிடமிருந்து தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக இந்த இடம் கிரையம் செய்யபட்டு, தொழுகைக் கூடமாக மாற்றப் பட்டது. அதன் பின்னர் இங்கே தினமும் 5 வேளை முஸ்லீம்கள் தொழுகை செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்தத் தொழுகைக் கட்டடத்தில் 2006-ஆம் ஆண்டு மராமத்துப் பணிகள் செய்யப் பட்டபோது தென்காசியைச் சேர்ந்த குமார் பாண்டியன் (த/பெ சொர்ண தேவர் மலையான் தெரு) அதனை எதிர்த்தார். இந்தப் பிரச்னைக்காக 17-12-2006 அன்று, குமார் பாண்டியனை ஹனிபா, சுனையல் சுலைமான், முருகேசன் அப்துல்லா ஆகியோர் கொலை செய்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தை அடுத்து 2007-ஆம் ஆண்டு, மூஸ்லீம் தரப்பில் 3 பேரும், இந்துக்களின் தரப்பில் 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து- முஸ்லீம் இருதரப்புக்கு இடையே பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத்தினர் 2014-ஆம் வருடம் இந்தத் தொழுகைக் கட்டடத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மேற்படி வழக்கில் விசாரணை செய்த மதுரை உயர் நீதிமன்றம் கிளை (WP no 16969/ 2014 ) வழக்கின் தீர்ப்பை 19 -11- 2019 -ம் தேதி ஒத்தி வைத்தது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று 30 -04- 2021 தீர்ப்பு வழங்கப் போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் மேற்படி தடையில்லாச் சான்று அளிக்க உத்தரவிடக் கோரி அளிக்கப் பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த இடத்தில் எந்த விதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப் படக் கூடாது என்றும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.