ஹரிநாடார் கேரளாவில் கைது!

சற்றுமுன் தமிழகம்
harinadar
harinadar

பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகளைப் பெற்றார்.

கழுத்து நிறைய நகைகளுடன் நகைக்கடையாக வலம் வந்த அவர் தற்போது மோசடி புகாரில் கைதாகியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவர் அளித்த புகாரின் பேரில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரி நாடார் கைது பற்றி கர்நாடக குற்றப்பிரிவு போலீஸாரிடம் விசாரித்தபோது,”நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார் சமீப காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்கு ஏராளமாக பணம் தேவைப்பட்டது. அதனால் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களில் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார்.

கர்நாடக போலீஸார் தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி கமிஷன் வாங்கி ஏமாற்றுவது ஹரி நாடார் வழக்கம்.

Hari nadar1
Hari nadar1

பெரிய தொழிலதிபர்களுக்கு திடீரென பணத்தேவை ஏற்படுவதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு 6 சதவிகிதத்தில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுப்பதாக ஹரி நாடாரும் அவரது நம்பர்களும் பேசுவார்கள். அதற்கு புரோக்கர் கமிஷனாக இரண்டு சதவிகிதம் வாங்கிக் கொள்வார்கள்.

பணத்தேவையில் இருப்பவர்கள், சுலபமாகவும் குறைந்த வட்டியிலும் கடன் கிடைப்பதால் கமிஷன் கொடுக்க முன்வருவார்கள். ஆனால் யாருக்கும் கடன் வாங்கிக் கொடுப்பதில்லை.

கிடைத்த பணத்தைத் திருப்பிக் கொடுப்பதுமில்லை. அதே போல பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரிக்கு ரூ.360 கோடி கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி புரோக்கர் கமிஷனாக 7.2 கோடி ரூபாயை வாங்கியிருக்கிறார்.

அந்தப் பணத்தை வைத்து தேர்தலில் நன்றாக செலவு செய்திருக்கிறார். கடன் தொகை கிடைக்காததால் கமிஷனாகக் கொடுத்த பணத்தை வெங்கட்ராமன் சாஸ்திரி திருப்பிக் கேட்டுள்ளார்.

அதற்காக அவருக்கு ஹரி நாடாரும் அவரது கூட்டாளிகளும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அவர் அச்சத்துடன் எங்களிடம் புகார் செய்தார்.

நாங்கள் விசாரணை நடத்தியதில் ஹரி நாடார் பணத்தை வாங்கிக் கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதனால் அவர் மீது அவரது கூட்டாளிகள் ஆறு பேர் மீதும் பணமோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தோம்.

நாங்கள் அவரைத் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டார். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கூட வரவில்லை.

முதலில் அவரது கூட்டாணியான ரஞ்சித் பணிக்கர் என்பவரை கைது செய்தோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவின் பூவார் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 3,893 கிராம் தங்க நகை, ரூ.8.76 லட்சம் ரொக்கப் பணம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஹரி நாடாரின் கூட்டாளியான ரஞ்சித் பணிக்கரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக ஆசை ஏற்படுத்தி மோசடி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஹரி நாடார் கூட்டாளிகள் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஹரி நாடாரின் வங்கிக் கணக்கையும் போலீஸார் முடக்கி வைத்துள்ளனர். அவரிடம் இருந்த பி.எம்.டபிள்யூ புதிய கார் மற்றொரு சொகுசு கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவரிடம் பிடிபட்ட நகையின் மதிப்பு மட்டும் 2 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.