
74. வீரத்தை வணங்குவோம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“நமஸ்தே அஸ்த்வாயுதாய” – யஜுர்வேதம்.
“ஆயுதங்களுக்கு நமஸ்காரம்!”
சாந்தி அளிப்பவன், நிர்மலமானவன் ஆன பகவான், கைகளில் பல ஆயுதங்களைத் தாங்கியுள்ளான். அவற்றை வணங்குகிறது வேதம்.
ஆயுதங்கள், அமைதி – இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லவா? அது மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றுவது. ஆயுதங்களை வன்முறைக்கு சின்னமாகப் பார்ப்பதால் அவ்வாறு நினைக்கிறோம். ஆனால் தற்காப்பு, தேசப் பாதுகாப்பு, ரட்சணை ஆகியவற்றுக்கு ‘பாதுகாப்பு அமைப்பு’ தேவை
அமைதி உபதேசங்கள், வேதாந்த போதனைகள் போன்றவை தனி மனித வாழ்க்கைக்குத் தேவைதான். மனிதனின் மனதில் அன்பு, சமரசம், அமைதி போன்றவை நிறைய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் நம்மைச் சுற்றிலும் அமைதியை விரும்புபவர்களே இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. எனவே அமைதியை விரும்பும் தேசங்கள் கூட வலிமையான பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அதுவே க்ஷத்திரிய தர்மம். பாதுகாப்புக்கு பங்கம் விளையாமல் எப்போதைக்கப்போது வலிமையான வீரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தனி மனிதனுக்கு வைராக்கியத்தால் சுயநலம் நீங்குகிறது. அப்படிப்பட்ட தியாக சீலத்தோடு ஸ்வதர்மத்தை காத்துக் கொள்வதற்கு வலிமை பெற்றிருப்பதும், நேரம் வரும்போது சாஸ்வத நன்மைக்காக அந்த ஆற்றலை பயன்படுத்துவதும் அரச தர்மம்.
இந்த தர்மத்தை சனாதன வைதிக கலாச்சாரம் தெளிவுபடுத்துகிறது. அதனால்தான் அகிம்சையை போதித்த வேதமாதா, அஹிம்சைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் இம்சையை எதிர்க்கும் ஆற்றலை பெற்றிருக்கும்படி போதிக்கிறாள். இதே கருத்தே பரமாத்மாவின் வாயிலிருந்து கீதா நாதமாக வெளிவந்து கிரீடியை ஆயுதத்தை ஏந்தும்படி தூண்டியது.
ஆயின், எதற்கும் எல்லையும் கட்டுப்பாடும் உண்டு என்பதை அறிந்து அவற்றையும் தெளிவாக அறிவிக்கிறாள் வேத மாதா. சாம, பேத, தான, தண்டம் என்ற உபாயங்களை கிரமப்படி ஏற்படுத்தினாள். சாத்வீகமான கட்டுப்பாட்டை கையாலாகாதத்தனமாக கருதும் நிலைமையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறாள். தர்மத்தில் எத்தனை சாத்வீகமான மென்மையும் பெருந்தன்மையும் இருக்குமோ, அதர்மத்தை தண்டிப்பதில் அத்தனை கடினமும் இருக்கும். இந்த விஷயத்தில் ஶ்ரீராமனே நமக்கு ஆதரிசம்.
இந்த க்ஷத்திரிய தர்மத்தில் இருக்கும் நிக்ரஹ, அனுக்ரஹ சாமர்த்தியம் பாரதிய அரசமைப்பில் வழி வழியாக வந்த வழிமுறை. இதனை உணராமல் தற்காப்புக்காக பயன்படுத்த வேண்டிய படைகளைக் கூட வேண்டாம் என்றதால்தான் எதிரிகளின் ரத்த தாகத்தை எதிர்கொள்ள வேண்டிய கோழைத்தனம் ஏற்பட்டது. வீரத்தை வழிபடும் கலாச்சாரத்தில் வந்த நாம், அதனை வன்முறைக்கு மறுவடிவமாக கற்பனை செய்து கொண்டதால் பிற நாடுகளின் வன்முறைக்கு பதிலடி கொடுக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
யாரும் வெல்ல முடியாத பராக்கிரமம் பெற்றிருந்தும் அனாவசிய யுத்தங்கள் தேவையில்லை என்ற ராஜ நீதியை பாரத தேசம் என்றுமே விடவில்லை. அதேபோல் பிறருடைய தாக்குதலைத் தாங்க இயலாத கோழைத்தனத்தையும் அங்கீகரிக்கவில்லை.
ஸ்வதர்ம ரக்ஷணைக்கும் தேசத்தின் சௌபாக்கியத்திற்கும் வக்கிரமில்லாத பராக்கிரம உற்சாகம் கொண்ட பாரதிய வீரர்கள், கருணையிலும் பெருந்தன்மையிலும் கூட சிறந்தவர்கள் என்ற விஷயத்தை நிரூபிக்கும் வலுவான அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.



