
பழம்பெரும் காமெடி நடிகர் ஆர்.வீரமணி (71), கொரோனாவால் உயிரிழந்தார். பத்ரகாளி, சின்ன பூவே, பொண்ணு வீட்டுக்காரன், தங்கமான ராசா உள்பட ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
நடிகர் நாகேஷுக்கு டூப்பாக பல படங்களில் வீரமணி நடித்துள்ளார். முன்னணி குணச்சித்திர நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். எம்.ஆர்.ராதா நாடகங்களில் நடித்து விட்டு பின்னர் சினிமாவுக்கு வந்தவர்.
நெசப்பாக்கத்தில் வசித்து வந்த வீரமணிக்கு நேற்று காலை திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் சேர்ந்த உடனேயே அவர் உயிர் பிரிந்தது. வீரமணிக்கு நாகரத்தினம் என்ற மனைவி, கவிதா சண்முகப்பிரியா, பவித்ரா என்ற மகள்கள் உள்ளனர்.
வீரமணி டப்பிங் யூனியன் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகளாக பதவி வகித்தவர்.



