
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 60 ஆண்டுகளாக சேவை மனப்பான்மையில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது இல்லத்திலேயே சிறிய அளவிலான மருத்துவமனை அமைத்து, ஆரம்ப காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.

நாட்கள் செல்ல செல்ல கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட இப்போது வரை கட்டணம் 50 ரூபாயை தாண்டவில்லை.
ஏழை எளிய மக்களுக்கு அவரிடம் மருத்துவம் இலவசம். அதே போல் பள்ளிச் சீருடையில் மருத்துவம் பார்க்க சென்றால் மாணவர்களுக்கு இலவசம்.
மருத்துவர் பார்த்தசாரதிஅமெரிக்கா, லண்டன் சென்று மருத்துவம் படித்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 தலைமுறை மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்று ஏற்படுவதற்கு முன்பு வரை அவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது, அவரிடம் சிகிச்சை பெற்ற ஏராளமான பொதுமக்கள் கூடி கதறி அழுதனர். பின்னர் உடனடியாக அவரது உடல், காசிமேடு மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது



