
ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஊரடங்கு காரணமாக கடந்த பல வாரங்களாகப் பூட்டிக் கிடந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவரின் எலக்ட்ரிகல் விற்பனை நிலையத்தில் மின்சார அழுத்தம் காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகேயுள்ள அடுக்கு மாடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரிக் கடையொன்று உள்ளது. இதில் வீடு மற்றும் கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒயர்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முழு ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக விற்பனை நிலையம் பூட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு விற்பனை நிலையத்திலிருந்து கரும்புகை வெளிவருவதாக அந்த வளாகத்தின் காவலாளி அனில்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த அனில்குமார் புகை அதிகரித்திடவே வி|ற்பனை நிலையத்தை திறந்து பார்த்த போது மின்சாதனப் பொருட்களில் தீ பற்றி எரியத் தொடங்கியதைக் கண்டு அச்சமடைந்து உடனடியாக ஈரோடு தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதற்கிடையில் இந்தத் தீவிபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. அதிக மின்சார அழுத்தம் காரணமாகவும், மின்கசிவு காரணமாகவும் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
தீவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



