தூத்துக்குடியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சில்வர்புரம் பாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (45). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது வீட்டின் சமையல் அறையை இடித்து விட்டு, புதிதாக கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று சமையல் அறையின் பக்கவாட்டு சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து தனசேகர் மீது விழுந்து உள்ளது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து தனசேகர் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.