
கர்ப்பிணி காதலி மீது டீசல் ஊற்றி பற்ற வைத்துவிட்டு வீட்டுக்கதவையும் பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார் இளைஞர். இந்த கொடூர சம்பவம் நடந்தது திருப்பூரில்.
ஆந்திராவை சேர்ந்த லட்சுமி(வயது21) தனது பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு கடந்த 2019ம் ஆண்டில் திருப்பூர் வந்துள்ளார். அங்கேயே தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
பனியன் கம்பெனிக்கு தினமும் ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் கவுதம்(26) உடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்வதாக கவுதம் சொன்னதால், அவருடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்திருக்கிறார்.
மூன்று மாத கர்ப்பத்துடன் இருந்த லட்சுமி, தன்னை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி கவுதமிடம் கேட்டிருக்கிறார்.
ஆனால், கவுதமும் அவரது வீட்டாரும் கர்ப்பத்தை கலைக்கச்சொல்லி இருக்கின்றனர்.
முடியாது என்று லட்சுமி உறுதியாக இருக்கவும், லட்சுமி மேல் டீசலை ஊற்றி தீ பற்றவைத்துவிட்டு வீட்டுக்கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஓடிவிட்டார் கவுதம்.
பின்னர் அவரே வந்து லட்சுமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் லட்சுமியை விட்டுவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார் கவுதம். சிகிச்சை முடிந்ததும் லட்சுமியை கோவையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
இந்த நிலையில் கவுதம் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்ததும், பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் லட்சுமி. புகாரின் பேரில் விசாரணை செய்து கவுதமை கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர் போலீசார்.