
பல்லடத்தில் பட்டா மாறுதலுக்காக பத்தாயிரம் லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் இடம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அந்த இடத்தில் பழைய வீட்டை இடித்து விட்டு புது வீடு கட்டுவதற்கு பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.
பட்டா மாறுதல் செய்து தர மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் கடந்த இரண்டாம் தேதி ராஜாமணியிடம் பத்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜாமணி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
புகாரினை பெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் தடவிய நோட்டுக்களை ராஜாமணியிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேகநாதனிடம் ராஜாமணி லஞ்சம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் மேகநாதனை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த பணத்தினை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டா மாறுதலுக்காக மண்டல துணை வட்டாட்சியர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.