
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரத மாதா, பூமாதேவி, ஹிந்துக்கள், எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி என பலரையும் தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் விமர்சித்த பாதிரியார் பொன்னையாவை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக., இன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில், பாதிரி ஜார்ஜ் பொன்னையா மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே கைது செய்யப் பட்டார்.
முன்னதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருந்தன. இந்நிலையில், தலைமறைவானதாகக் கூறப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிந்து மதம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரத மாதா, பூமா தேவி, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோரை வாய்க்கு வந்த படி வசவுகளாலும், மிக மோசமான வார்த்தைகளாலும் பேசியிருந்தார் பாதிரியார் பொன்னையா. குறிப்பாக, திமுக., குறித்தும் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இன்றைய திமுக., அரசு, கிறிஸ்துவ இஸ்லாமிய சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீது புகார்கள் பல அளிக்கப் பட்டன. பாதிரி மீது 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாகக் கூறப் பட்டது. அவர் கடல் வழியாக அருகில் உள்ள தீவுப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று தகவல்கள் கசியவிடப் பட்டன.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்தக் கட்டடம் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள, அருமனையில் ஜூலை 18ஆம் தேதி ஒரு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசினார்.
அப்போது அவர், ‘திமுக.,வின் வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, இப்போது 62 சதம் வளர்ந்து விட்ட கிறிஸ்துவர்களின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. இதை இந்து சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்… அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு என்னதான் துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் இந்துக்கள் எவனும் திமுக.,வுக்கு ஓட்டு போடமாட்டான்’ என்றெல்லாம் பேசிய பாதிரியார், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் குறித்தும் மிகக் கேவலமான முறையில் பேசினார்.
அவரது இந்தப் பேச்சு, சமூகத் தளங்களில் பெரும் அளவில் வைரலானது. அவரது பேச்சு, ஹிந்துக்களின் மத்தியில் பெரும் மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகத் தளங்களில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். அதே நேரம், திமுக., ஆட்சி சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்பதால், அவர் மீது திமுக., எந்த நடவடிக்கையும் எடுக்காது, பாதிரியார் உண்மையத் தான் பேசியிருக்கிறார், பிச்சை வாங்கியவர்கள் தங்களுக்கு பிச்சை அளித்தவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற விதத்தில் கருத்துகள் பகிரப் பட்டன.
திமுக.,வையும், அதன் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் குறித்தும் தரக்குறைவாகப் பேசியிருந்த நிலையிலும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் தமிழகம் முழுதும் பல இடங்களில் போலீசில் புகார் அளித்தனர்.
இதை அடுத்து அருமனை போலீசார், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ‘நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் ஹிந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்’ எனக் கூறியிருந்தார்.
இந்தப் பரபரப்பு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையிலும், பாதிரியார் கைது செய்யப் படவில்லை. இதனிடையே அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் போலீசார் முகாமிட்டனர். அப்போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் அவர் ஊர் திரும்புவார் என்றும் தகவல்கள் கசியவிடப் பட்டன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே மண்டைக்காடு கலவரத்தை முன்னின்று நடத்திய கிறிஸ்துவ பாதிரிகளால், அதைக் குறிப்பிட்டே மீண்டும் மத மோதல்கள் எழும் சூழ்நிலை உருவானதால், பாதிரியாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாஜக., இன்று போராட்டம் அறிவித்தது. மேலும், ஹிந்து அமைப்புகள் பலவும் போராட்ட எச்சரிக்கை விடுத்த நிலையில், அரசுக்கு நெருக்கடி முற்றியது.
இதனிடையே, பாதிரி ஜார்ஜ் பொன்னையா, சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பிச் செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மதுரை கருப்பாயூரணியில் நள்ளிரவு நடந்த வாகன சோதனையில் சிலைமான் போலீசாரிடம் ஜார்ஜ் பொன்னையா சிக்கினார். பின்னர் விசாரணைக்காக கோவில்பட்டி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க அழைத்து செல்லப்பட்டார்.
முன்னதாக கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப் பட்டு விசாரணை செய்த போலீஸார், இன்று அவரை குமரி மாவட்ட போலீசாரிடம் ஒப்படைப்பர் என்று கூறப் பட்டது.