spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகுட்டி ’மேஸ்திரி’யில் துவங்கிய முயற்சி, சுவாமிநாத ’அய்யரில்’ முடிவு பெறுமா?

குட்டி ’மேஸ்திரி’யில் துவங்கிய முயற்சி, சுவாமிநாத ’அய்யரில்’ முடிவு பெறுமா?

- Advertisement -
dr krishnasamy
dr krishnasamy

அன்று; ’குட்டி மேஸ்திரி’யில் துவங்கிய சாதி ஒழிப்பு முயற்சி, இன்று; பாடப்புத்தகத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் (சாஸ்திரி) சாதிப்பெயர் நீக்கத்தில் முடிவுக்கு வருமா ?

இந்தியாவை பன்னெடுங்காலம் பீடித்து இருப்பதும், எளிதில் தீர்வு காண முடியாத சமூக நோயாகவும் இருக்கக்கூடிய சாதியை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுக்காதவர் எவரும் இல்லை. எனினும் சாதி ஒழிந்த பாடில்லை. ’சாதி ஒழிய வேண்டும்’ என்று இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகமான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஒட்டுமொத்த சாதி ஒழிப்பை ’பிராமண ஒழிப்பு’ என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி தமிழகத்தில் ’பிராமண சாதி எதிர்ப்பு இயக்கங்கள்’ தோன்றின.

நான்கு வர்ணங்களை கொண்ட சமூக அமைப்பில் ’பிராமணர்கள்’ மேற்தட்டு வர்க்கத்தினராகக் கருதப்பட்டார்கள். ஆனால் நான்கு வர்ணங்களையும் தாண்டி சமூக கலப்புகளே ஏற்படாத வண்ணம் இறுகிய மனச்சுவர்கள் எழுப்பப்பட்டு ஆயிரக்கணக்கான சாதி கட்டமைப்புகள் உருவகம் பெற்றன. இதன் விளைவாக சமூகத்தில் ஒற்றுமையின்மையும், அடிக்கடி மோதல்களும், அதனால் அமைதியின்மையும் இன்றுவரை நிகழ்கின்றன. ஒரு பக்கம் ’சாதி ஒழிக’ என முழக்கமிட்டுக் கொண்டே, இன்னொரு பக்கம் சாதியத்தை பள்ளிப்பருவத்திலிருந்தே ஊட்டி வளர்க்கும் நேரெதிரான நடவடிக்கைகளில் அரசுகளே ஈடுபடுகின்றன.

என்றோ, ஏதோ சமூக விபத்தினால் ஏற்பட்ட சாதிய பிரிவினைகளை முற்றாக ஒழித்துக் கட்டி நல்ல உணவு, உடை, நல்ல கல்வி கொடுத்து சமூகங்களை மேம்படுத்தி சமப்படுத்துவதற்கு பதிலாக வேறுபாடுகளையே நிரந்தரமாக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைகின்றன. தகுதியின் அடிப்படையில் இல்லாமல், சாதியின் அடிப்படையில் மட்டுமே எந்த வாய்ப்புகளையும் பெற முடியும் என்ற ஒரு மோசமான நிலையை உருவாக்கி, குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களிலேயே ’சாதி’ என்ற நஞ்சுகள் விதைக்கப்படுகின்றன.

இந்தியர்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் சாதி, இன, மத, மொழி, பகுதி ரீதியாகக் கூறு போட்டதைக் காட்டிலும் தமிழகத்திலே இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் ஆசை வார்த்தைகளைக் காட்டி சமூகங்களை மேன்மேலும் கூறு போடும் நடவடிக்கைகளே தொடருகின்றன. இந்த வரலாற்றுப் பிழைகளைச் சரி செய்ய எத்தனை ஆண்டு காலம் பிடிக்கும்? என்று இப்போது சொல்ல முடியாது. ஒரு பக்கம் சாதியை ஒழிப்பதற்கான செயலில் ஈடுபடுவது போலவும், இன்னொரு பக்கம் இளைய தலைமுறையினரிடையே பள்ளிப் பருவத்திலேயே சாதிய மோகத்தை வளர்க்கக்கூடிய செயல்களையும் செய்யும் அரசின் மாறுபட்ட நிலைப்பாடுகளை சமூகம் எப்படி எதிர்கொள்ள முடியும்?

ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு கரையான் அரிப்புக்கு ஆளாகி காணாமல் போய்விடும் நிலையிலிருந்த அரும்பெரும் தமிழ் இலக்கியங்களை எல்லாம் தேடிப் பிடித்து, தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அவைகளை நூல் வடிவமாக்கி தமிழ் மொழியின் பெருமைக்கும், தமிழ் மொழியின் காவியங்களுக்கும் அழியா புத்துயிர் அளித்தவர் ’தமிழ்த்தாத்தா’ என அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். தமிழக அரசின் +2 பாடப்புத்தகத்தில் ’பண்டைய கால பள்ளிக்கூடங்கள்’ எனும் தலைப்பில் உள்ள அவரது கட்டுரையில் இடம் பெற்றுள்ள அவரது பெயருக்கு பின்னால் இருந்த ’அய்யர்’ என்பது நீக்கப்பட்டு வெறும் ’உ.வே.சுவாமிநாதர்’ என்ற பெயர் மட்டும் இருப்பதாகவும், அதேபோல அவருக்கு ஆசிரியராக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் தமிழ் அறிஞர்களான மாயவரம் வேதநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர் தாமோதரம் பிள்ளை போன்றோர்களின் பெயர்களில் உள்ள பிள்ளைகள் எனும் பெயர்களும் நீக்கப்பட்டதாக இன்றைய ’தி இந்து’ ஆங்கிலேய நாளேட்டில் செய்திகள் வந்துள்ளன.

பெயருக்கு பின்னால் வலிந்து போடக்கூடிய சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த நடவடிக்கைகள் முழுக்க முழுக்க இதயச் சுத்தியோடு இருக்க வேண்டும். உ.வே.சாமிநாத அய்யர், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வேதாரணியம் போன்ற மகத்தானவர்கள் சாதியைத் தூக்கிப் பிடிப்பதற்காகவும், சாதிப் பெருமையை பேசுவதற்காகவும் அவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி அடையாளங்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது வெறுமனே குடும்ப அடையாளத்திற்காகப் பயன்படுத்தினார்களா? என்பது தெரியாது. ஆனால் தமிழுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அவர்கள் சாதி பெருமைகளைத் தேடிக் கொள்ள நிச்சயமாக முயற்சித்து இருக்க மாட்டார்கள் என்று நாம் முழுமையாக நம்பலாம்.

அந்த அரிய மனிதர்களை அடையாளப் படுத்துகின்றன போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்களுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யர், முதலியார், பிள்ளை போன்ற பட்டங்களும் சேருகின்ற போதே அவர்களுடைய அடையாளங்கள் முழுமை பெறுகின்றன. ஆனால் ஒருவேளை இந்த அரசு சாதியை ஒழிப்பதில் மிகத் தீவிரமாகவும், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என முடிவெடுக்கும் பட்சத்தில் அத்தமிழ் அறிஞர்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சாதிப் பெயர்களைக் கூட நீக்கிக் கொள்ளட்டும். அதனால் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டும், அவர்களது அடையாளங்களும் குறைந்தும் போகாது; மறைந்தும் போகாது.

தமிழ்நாடு அரசு இதை சாதி ஒழிப்பின் அடிப்படையில் செய்திருக்குமேயானால் ஒரு பாடப்புத்தகத்தில் மட்டும் அடையாளத்திற்கு சாதி பெய்ர்களை நீக்கி விட்டு, அத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் கல்வி, தொழில், வணிகம், கலாச்சாரம், அரசியல் போன்ற அனைத்திலும் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தெருக்கள் மற்றும் வீதிகள் போன்றவற்றில் இருந்த சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு அன்றைய எதிர்க்கட்சியான திமுக முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், இன்று தமிழகத்தில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வேரூன்றியுள்ள சாதிவெறிகள் பெருமளவில் நீங்கி, மனித நேயம் மிக்க தமிழ் சமுதாயமாகவும், தமிழ் உணர்வோடு இந்தியர்களாகவும் உலக அளவில் மிளிந்திருப்போம்.

சென்னையில் சாதிகளின் பெயரை தாங்கிய பல வீதிகள் இருந்தன. அதில் ’குட்டி மேஸ்திரி வீதி’யும் ஒன்று. அதை சுட்டிக்காட்டிய கருணாநிதி அவர்கள் ’மேஸ்திரியை’ சாதிப் பெயராகக் கருதி நீக்கிவிட்டால் அது ’குட்டி வீதி’யாகி விடுகிறது என கிண்டலடித்தார். அது போன்ற பல எதிர்விளைவுகளின் காரணமாக எம்.ஜி.ஆரின் உண்மையான சாதி ஒழிப்பின் ’புரட்சிகர திட்டம்’ நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.

அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் போட்ட உத்தரவின் அடிப்படையில் இன்றும் கூட சென்னையின் பல சாலைகள் சாதிப் பெயர்கள் இல்லாமலே இருக்கின்றன. ’திருமலை பிள்ளை சாலை’ இப்போது ’திருமலை சாலையாக உள்ளது. திருமலை சாலை என அழைப்பதால் எந்த குடியும் மூழ்கிப் போய்விடவில்லை; அந்த வீதிக்கும் எவ்வித பாதிப்பும் வந்துவிடவில்லை. எனவே இன்றைய அரசு ஒருவேளை சாதியை ஒழிப்பதில் உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுவதாக இருந்தால் அன்று எம்.ஜி.ஆர் போட்ட உத்தரவிலிருந்து துவங்க வேண்டும்; அதை விரிவுப்படுத்தவேண்டும். வீதிகள், சாலைகள், தெருக்களை மட்டுமல்ல; ஊர்கள், கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்திலும் உள்ள சாதிப் பெயர்கள் அறவே நீக்கப்பட வேண்டும்.

அதேபோல இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தின் பெரும் பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதிய பெயர்களையே தாங்கி இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு கூட, தமிழகத்தில் ஒரு பல்கலைக் கழகத்திற்கு சாதிய பெயருடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து கல்விக்கூடங்களிலும் எவ்வித சாதிய அடையாளமும் இடம்பெறக் கூடாது.

அதே போலச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அரசியல், சமுதாய போராளிகள் பெயருக்குப் பின்னாலும், அவர்களை அழைக்கின்ற போதும் எவ்விதத்திலும் சாதிப் பெயர்கள் இடம் பெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான சாதிகளின் பெயர்ப்பலகைகள் தேசிய நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்தும் உள்ளன. அரசு ஊழியர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிகளைப் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. அவை அனைத்தும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே திரைப்பட பெயர், பாடல், காட்சி, வசனங்களில் சாதிய பெயர்கள் இடம் பெறக்கூடாது என கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சி போராடி வருகிறது. தமிழகச் சட்டமன்றத்தில் நாம் உறுப்பினராக இருந்த 1996-2001 மற்றும் 2011-2016 காலகட்டங்களில் வீதிகள், ஊர்கள், பள்ளிகளில் உள்ள சாதிய பெயர்களை நீக்க வலியுறுத்தி பலமுறை குரல் கொடுத்து இருக்கிறோம்.

பல பெரிய நகரங்கள் கூட சாதிய பெயரால் இயங்கி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சாணார்பட்டி என்ற ஒன்றியங்கள் இருக்கின்றன; சக்கிலியர் குளம், பறையர் குளம், பள்ளப்பட்டி போன்ற பல ஊர்கள் இருக்கின்றன. கவுண்டர், ரெட்டி, நாயக்கர், செட்டி, தேவர், மறவன், முதலியார், நாடார் என அனைத்து சாதி பெயர்களிலும் எண்ணற்ற ஊர்கள் இருந்து வருகின்றன.

எனவே ’சாதி ஒழிப்பு’ என்பது ’அய்யர்-அய்யங்கார்’ என்ற பெயர்களை மட்டும் நீக்கி விட்டால் மட்டும் ஒழியாது. அனைத்து சாதி பெயர்களையும் நீக்கினால் மட்டுமே அது முழுமை பெறும். எனவே சாதி ஒழிப்பு பணியை இலகுவாக நினைக்காமல் சாதியை ஒழித்தே தீர வேண்டுமென ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட வேண்டும்.

மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களில் எவ்விதத்திலும் சாதி அடையாளங்கள் இடம் பெறக்கூடாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை சில முக்கிய தேவைகளின் அடிப்படையில் பயன்படுத்த சாதி சான்றிதழ்களை தனியாக பெற்றோர்கள் மட்டுமே வைத்துக் கொள்ளும் வண்ணம் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களிடத்திலே நிலவக்கூடிய சாதி பேதைமைகளை ஒழித்துக்கட்ட கூடிய வகையில் வீதி, தெருப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி சாதி ஒழிப்பை எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார். 40 வருடங்களுக்குப் பிறகு, உ.வே.சாமிநாத அய்யர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களின் சாதிப்பெயர்களை பாட புத்தகங்களில் நீக்கி ’சாதி ஒழிப்பு’ மீண்டும் துவங்கப்பட்டிருக்கிறது. இது வெறும் பிராமண சாதி ஒழிப்பாக மட்டும் இருக்க கூடாது; திராவிட ஸ்டாகிஸ்ட்கள் மற்றும் தமிழர்களித்திடலே ஊறிப்போயுள்ள சாதியை ஒழிக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

குட்டி ’மேஸ்திரி’யில் துவங்கிய முயற்சி, சுவாமிநாத ’அய்யரில்’ முடிவு பெறுமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
    நிறுவனர்& தலைவர், புதிய தமிழகம் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe