
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மார்லிமந்து எனும் பகுதியில் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருபவர் சந்திரன் (42). இவருக்கு கீதா (35) என்ற மனைவியும், ரக்க்ஷிதா(16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உறவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடுகள் கத்துவதாக கூறியுள்ளார். இதன் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது சந்திரன் வீட்டு கதவு உள் பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த நந்தகுமார், புதுமந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
காவல் துறையின் உதவியோடு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுமந்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நான்கு பேரின் உடல்களை மீட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் புதுமந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.