spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்திருப்புகழ் கதைகள்: அவனிதனிலே பிறந்து - பழனி ஆகமங்கள்!

திருப்புகழ் கதைகள்: அவனிதனிலே பிறந்து – பழனி ஆகமங்கள்!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 149
அவனிதனிலே பிறந்து – பழநி ஆகமங்கள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆகமங்கள் என்பது இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் (மற்றவை கௌமாரம், கணாபத்யம், சௌரம்) மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். ஆகமங்கள் பொதுவாகத் தென்னிந்தியாவிலேயே புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.

ஆகமம் என்பது ஆ, கமம் என்னும் இரு தமிழ்ச் சொற்களின் புணர்ச்சியால் உருவான சொல். ஆ என்பது ஆன்மா. சைவ சித்தாந்தத்தில் இது பசு எனக் கூறப்படும். கமம் என்னும் சொல் நிறைவு என்னும் பொருளைத் தரும். உயிர் சிவத்தோடு ஒன்றி நிறைவு பெறுதலை உணர்த்தும் தமிழ்ச்சொற்றொடர் ஆகமம். ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் ‘போய்ச் சேர்தல்’, ‘வந்தடைதல்’ என்னும் பொருளைத் தருவது. இதற்குத் “தொன்று தொட்டு வரும் அறிவு” என்றும் “இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்” என்றும் அறிஞர் பொருள் கூறுவர்.

vikhanasar
vikhanasar

ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவை. மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்” எனச் சொன்னதோடு “மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும்” என்றும் பாடுகிறார். திருமூலர் ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே”என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றானே” என்றும் கூறுகின்றார். “செந்தமிழ் சிந்தை செய்து ஆகமம் செப்ப லுற்றேனே” என்று நம்பிரான் திருமூலர் பாடி அருளினார். மேலும் அதை தெய்வத்தமிழில் தான் அருளினேன் என்பதற்கு “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்று, வழி வழியாக வந்த ஆகமங்களை இறைவன் கூற நமக்கு அருளினார் என்று அவரே கூறுகிறார். “நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே” என்று நம்பிரான் திருமூலர் ஒன்பது ஆகமங்களை அருளினார்.

சிவாகமங்கள்

சைவ ஆகம நூல்கள் ஆகமம் என்றும், வைணவ ஆகம நூல்கள் ஸம்ஹிதை என்றும், சாக்த ஆகம நூல்கள் தந்திரம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. ஆகமம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகின்றது. ஆகமத்தின் கடவுட் கோட்பாட்டினை நோக்கும்போது அது உபநிடதக் கடவுட் கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டதாக காணப்படுகின்றது. கடவுள் ஆன்மா இவ்விரண்டிற்கும் இடையிலான தொடர்பு, வேற்றுமை என்பவற்றை உபநிடதங்கள் புலப்படுத்துகின்றன. கடவுளின் இயல்புகள் கடவுளை வழிபட்டு முத்தியடைவதற்கான வழி என்பன உரையாடல், ஆராய்ச்சி மூலமாக தெளிவு படுத்தப்படுகின்றன.

nandi deva
nandi deva

சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவை இறைவனின் வெவ்வேறு அங்கங்களில் இருந்து தோன்றின எனக் கருதப்படுகிறது. அவற்றின் பட்டியல் வருமாறு 1. காமிகம் – திருவடிகளில் இருந்து தோன்றியது, 2. யோகஜம் – கணைக்கால்கள், 3. சிந்தியம் – கால்விரல்கள், 4. காரணம் – கெண்டைக்கால்கள், 5. அஜிதம் அல்லது அசிதம் – முழந்தாள், 6. தீப்தம் – தொடைகள், 7. சூக்ஷ்மம் – குய்யம் (அபான வாயில்), 8. சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் – இடுப்பு, 9. அம்சுமதம் அல்லது அம்சுமான் – முதுகு, 10. சுப்ரபேதம் – தொப்புள், 11. விஜயம் – வயிறு, 12. நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் – நாசி, 13. ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் – முலை மார்பு, 14. அனலம் அல்லது ஆக்னேயம் – கண்கள், 15. வீரபத்ரம் அல்லது வீரம் – கழுத்து, 16. ரௌரவம் – செவிகள், 17. மகுடம் – திருமுடி, 18. விமலம் – கைகள், 19. சந்திரஞானம் – மார்பு, 20. பிம்பம் – முகம், 21. புரோத்கீதம் – நாக்கு, 22. லளிதம் – கன்னங்கள், 23. சித்தம் – நெற்றி, 24. சந்தானம் – குண்டலம், 25. சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் – உபவீதம், 26. பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் – மாலை, 27. கிரணம் – இரத்தினா பரணம், 28. வாதுளம் – ஆடை

வைஷ்ணவ ஆகமங்கள்

இவை பாஞ்சராத்திரம், வைகானசம் என இருவகைப்படும். பாஞ்சராத்திரம் ஐந்து இரவுகளில் திருமாலால் அருளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனை வேதத்துக்கு இணையாக் கருதினார் இராமானுசர். வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே முக்கிய சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள் தீட்சை பெற்றுக் கொண்டவர்களையும் கோயில் பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்கார தீட்சை பெற்ற பிராமணர் அல்லாதவர்களையும் சில கோயில் பணிகளில் ஈடுபட அனுமதிக்கிறது.

கிராமப்புறப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் இதர சமுகத்தை சேர்ந்தவர்கள் இன்றும் பூசைகள்செய்து வருகின்றனர். பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம் பெறுகின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசை முறை வேறுபடுகின்றது. திவ்வியப் பிரபந்தத்தில் வைணவ தீட்சையான திருவிலச்சினை வலியுறுத்தப்படுகிறது. நின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு என்று பெரியாழ்வார் பாடக் காணலாம். ஆதலால் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் பாஞ்சராத்திர நெறியினை ஏற்றுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe