ஸமது:கஸுக: ஒருவன் சுகம்-துக்கம் ஆகிய இவ்விரண்டிலும் ஒரேமாதிரி இருக்க வேண்டும். கொஞ்சம் சுகம் ஜாஸ்தியாக சிலருக்கு வந்துவிட்டால், “எனக்கு நிகர் யார்?” என்ற எண்ணம் தோன்றிவிடும்.
அதே சமயம் ஏதாவது கஷ்டம் வந்து விட்டாலோ, “இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்ற வெறுப்பு உண்டாகும். இவை இரண்டுமே சரியான நிலைப்பாடு இல்லை. எவன் சுகத்திலும் துக்கத்திலும் ஸமுத்திரத்தைப் போல் கம்பீரமாக இருந்து, “எல்லாம் இறைவனின் விருப்பம்” என்று கருதுகிறானோ அவன்தான் உயர்ந்தவன்.
அதனால்தான் இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், சுகமோ அல்லது துக்கமோ சாசுவதமாக இருக்கக் கூடியதல்ல.
மஹாகவி காளிதாஸ் ஓரிடத்தில்,
கஸ்யாத்யந்தம் ஸுகமுபநதம் துக்கமேகாந்ததோ வா
என்றார். யாருக்குத்தான் பரிபூரணமான சுகம் நிச்சயமாகக் கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியும்? அதே போல் எவனுக்குத்தான் பரிபூரணமான துக்கம் வந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?