
திண்டுக்கல்லில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலலர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகன் (28). விவசாயி. இவர், தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், பட்டா மாறுதல் செய்வதற்கு சின்னழகனிடம் 4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சின்னழகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.
எனவே இதுகுறித்து அவர், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் நோட்டுகளை சின்னழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.
அதன்பேரில் சின்னழகன், கோமனாம்பட்டியில் உள்ள கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் 4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று கையும் களவுமாக தங்கவேலை பிடித்து கைது செய்தனர். சமீபத்தில் இந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.