
கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், மாநில தேர்தல் ஆணையம் – அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும், இதற்காக நவம்பர் 3 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை….
அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பின் மூலம் கடையம் யுனியன் சேர்மனாக திருமதி.செல்லம்மாள் முருகேசன் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்ற அடுத்த நாளே அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடியினாலும், அழுத்தத்தினாலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் குறித்து 30ஆம் தேதி நாளிட்ட மதுரை தினமலரில் வந்த செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
அவருக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ரூபாய் ஒன்றரை கோடி செலவு செய்துள்ளதாகவும், அதைக் கொடுத்தால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும்; இல்லையெனில் கடையம் யுனியன் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளதாலேயே அவர் ராஜினாமா செய்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜனநாயகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள், கிராம அளவில் வாழும் ஏழை, எளிய மக்கள், விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்கள் போட்டியிடுவதற்காகவே பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆவது கூட பலரது கனவாகும். அந்த வகையில் ஒரு ஒன்றிய தலைவர் பதவி என்பது திருமதி.செல்லம்மாள் அவர்களுக்கு தனது வாழ்நாள் கனவாகக் கூட இருந்திருக்கும். மேலும் அவரது குடும்பத்தாரும் அந்தக் கட்சியிலேயே ஏறக்குறைய முப்பது வருடத்திற்கு மேலாக இருந்து உள்ளதாக கூறுகின்றனர். மாற்றுக் கட்சியினர் கூட மனதார அந்த பெண்மணிக்கு வாக்களித்துள்ளார்கள். இந்நிலையில் அவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கேட்டுக் கட்டாயப்படுத்தி அந்த பதவி நாற்காலியில் அமர்வதற்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானதும், அராஜகமானதும், மனித உரிமை மீறலும் ஆகும்.
ஒரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சில ஆயிரங்கள் மட்டுமே செலவழிக்க முடியும். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்த அந்த நபர் ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்தார் என்று சொல்லுகிறார்களே, அது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகாதா? சேர்மனாக வெற்றிபெற்ற செல்லம்மாள் அவர்கள் கேட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க முடியாததாலேயே ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கும் மாறானது ஆகும்.

எனவே, தென்காசி மாவட்ட நிர்வாகம் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக் கூடாது. மாநில தேர்தல் ஆணையமும் செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி ஒன்றரை கோடி ரூபாய் விவகாரம் குறித்தும், அவரை ராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த சூழல், அச்சுறுத்தல் குறித்தும் முறையான விசாரணையை மாவட்ட அளவிலான நீதிபதியைக் கொண்டு நியாயமான முறையில் விசாரித்து நீதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
செல்லம்மாளின் ராஜினாமா ஏற்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுமேயானால் இதுவே பல கிராம ஊராட்சி, ஒன்றியங்களில் வருங்காலங்களில் இதுபோன்ற தவறான செயல்கள் நடைபெற ஆக்கமும், ஊக்கமும் அளித்து விடும். இப்படித்தான் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் ஒவ்வொரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்தார்கள். மேலூர் – மேலவளைவில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
எனவே, இச்சம்பவத்தில் தமிழக அரசு நியாயமான அணுகுமுறையைக் கையாளவும், செல்லம்மாளின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அவர் அப்படியே அப்பதவியில் தொடரவும், அவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு நிர்ப்பந்தம் செய்து ராஜினாமா செய்ய வைத்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வரும் நவம்பர் 3 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கடையம் யூனியன் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியின் மாநில பொறுப்பாளர் வீ.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஆ. ராசையா, ஊராட்சி மன்ற தலைவர் ச. ராஜேந்திரன், மாநில துணைப்பொறுப்பாளர் இன்பராஜ், மாவட்ட இணைச் செயலாளர் அக்கரைப்பட்டி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொள்வார்கள்.