கடையம் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வான பெண், திமுக.,வினர் கொடுத்த அழுத்தத்தால் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆட்சியர் ஏற்கக் கூடாது என்று பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் திமுக ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் முருகன் மனைவி செல்லம்மாள் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் விஜயகுமார் குறைவான ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். கட்சி வேட்பாளரை தோல்வியடையச் செய்த கட்சியின் ஒன்றிய செயலாளர் குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். வெற்றி பெற்ற செல்லம்மாள் ஒன்றியக் குழு தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மாலை அவர் பதவியை ராஜினாமா செய்தார். தென்காசி ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
அவர் ஒரு வீடியோவில் இதுகுறித்து கூறுகையில் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் தன்னிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டார் என்றும், பணம் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்யும்படி கூறினார், என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன் தெரிவித்த போது, கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயகுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவழித்துள்ளார். கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். எனவே செல்லம்மாள் பதவியை தொடர வேண்டும் என்றால் அந்தத் தொகையை கொடுக்க வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர்கள் கூறினர். முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்கிறார். அந்த ஒரு கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
கவுன்சிலர்கள் பணம் வாங்கிக் கொண்டதையும், அதற்காக திமுக., ஒரு கோடியே பத்து லட்சம்செலவு செய்ததையும், ஒரு பெண் அந்தத் தொகையைக் கொடுத்தால் மட்டுமே அவர் பதவியில் தொடர முடியும் என்றும் திமுக., மிரட்டியுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம்படைத்தவர் மட்டுமே கிராமிய அளவிலான குழுக்களிலும் தொடர முடியும் என்பதை இது எடுத்துக் காட்டியுள்ளது.
இந்நிலையில், பாஜக., மூத்த தலைவர் ஹ.ராஜா தமது டிவிட்டர் பதிவில், கடையம் ஒன்றிய குழு தலைவராக பொறுப்பேற்ற திருமதி செல்லம்மாள் அவர்களிடம் திமுக ஒன்றிய செயலாளர் சிவபத்மநாபன் 1.1 கோடி கேட்டு நிர்பந்தித்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அந்த ராஜினாமாவை ஏற்கக் கூடாது. மேலும் திமுக செயலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்… என்ற கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் – கட்டாய ராஜினாமா! மாநில தேர்தல் ஆணையம் – அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக்கூடாது!! நவம்பர் 3 ஆம் தேதி கடையம் யூனியன் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்! என்று,புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.