
மக்கள் அதிகமாக வந்துபோகும் ரயில்நிலையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ‘கூண்டு’ போன்ற அறைகள் பயணிகளிடையே கவனமீர்த்து வருகிறது.
நாட்டிலேயே அதிகமானபேரால் பயன்படுத்தப்படும் ரயில் நிலையங்களில் மும்பை செண்ட்ரல் முதன்மையான இடத்தில் உள்ளது.
இங்கு புறநகர் ரயில்நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளவும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை பிடிக்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

அவர்களுடைய வசதிக்காக ‘போட்’ எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள தங்கும் அறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதை ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சாகேப் திறந்து வைத்தார். கூண்டு போன்ற வடிவிலான இந்த அறைகள் ‘கேப்சூல் அறைகள்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் இந்த அறையை வாடகைக்கு எடுத்து படுத்து உறங்கலாம் அல்லது அமர்ந்துகொள்ளலாம். இதற்கு டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை என பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

இந்த கேப்சூல் அறைகளில் 12 மணிநேரம் தங்குவதற்கு ரூ. 999 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் 24 மணிநேரம் தங்க விரும்பினால் ரூ. 1,999 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ரெயில் கேப்சூல் அறைகளில் பயணிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்ட்ரலில் இந்த ‘போட்’ தங்கும் அறைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.