
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கால் பூக்கள் விலை கடுமையாக சரிந்தது. இதனால் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றனர்.
பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது விழாக் கால சீசன் விவசாயிகள் அதிக அளவு சம்பங்கி பூக்களை சாகுபடி செய்கின்றனர். வழக்கமாக மார்கழி மாதத்தில் கோவில் விசேஷங்களுக்கும் அதனைத் தொடர்ந்து வரும் தை மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும் என்பதால் மார்கழி மற்றும் தை மாதத்தில் மகசூல் தரும் வகையில் விவசாயிகள் பூ செடிகளை நட்டுப் பராமரித்து வருகின்றனர்.
தற்போது பூக்கள் வரத்து தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்குத் திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (ஜன.9) நடைமுறைப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக சம்பங்கி பூ கிலோ ரூ.10 க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.30 க்கும் விற்பனையாகிறது.
விலை குறைவால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளை சாலையின் ஓரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்ற அவலநிலை தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.