
கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், மீண்டும் 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது
இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டுக்கு வருவதாகவும், நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோவில் போன்றது தொடர்பாக தவறான தகவல்களை இவை பரப்பி வருவதாகவும் புகார் எழ, அந்தக் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசு அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுத்தது.
இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் 35 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்த 35 சேனல்களும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்தவை. இவை இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளன.
35 யூடியூப் சேனல்கள் உடன் 2 ட்விட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 இணையதளங்கள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த சேனல்கள் 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டவையாகும்.
இவற்றில் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறைகள்) சட்டம் 2021, விதி 16-ன் கீழ் இந்த முடக்கத்துக்கான 5 உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விக்ரம் சஹே, “உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட சேனல்களை தடுப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்த கணக்குகள் அனைத்திலும் இருக்கும் பொதுவான காரணி என்னவென்றால், அவை பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதுடன், இந்தியாவுக்கு எதிராக போலிச் செய்திகளை பரப்புகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்படும் யூடியூப் தளங்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்திலும், இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது, பொய்களைப் பரப்புவது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துவது போன்ற எந்தவொரு கணக்கையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தற்போது 35 யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.