
சென்னையைச் சேர்ந்த சிறுமி அஸ்வதா பிஜுவுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப் படும் பிரதம மந்திரியின் பால புரஸ்கார் அறிவிக்கப் பட்டுள்ளது.
14 வயதாகும் சிறுமி அஸ்வதா பிஜு, தற்போது இந்தியாவின் மிக இளைய வயதின் பேலியன்டாலஜிஸ்ட் ஆகத் திகழ்கிறார். பேலியன்டாலஜிஸ்ட் என்பது புதைபடிவ பொருட்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது. சிறிய வயதிலேயே இவருக்கு புதைபடிவ பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாக இவரின் தாயார் கூறுகிறார்.

சிறுவயதில் இருந்தே புதைப் படிவப் பொருட்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று, தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். அதன் காரணமாகத்தான் தற்போது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது தற்போது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டுக்கான விருதுக்கு 29 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களில் நம் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

பிரதம மந்திரியின் பால புரஸ்கார் விருது பெற்றுள்ள அஸ்வதா பிஜுவின் தாயார் விஜயராணி கூறுகையில், “3 வயதில் இருந்தே இவருக்கு சிப்பிகள் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. தகவல் களஞ்சிய நூல்களான என்சைக்ளோபீடியா புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. சிறு வயதில் எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு அவள் பலமுறை அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தாள். அதன் மூலம் அவளுக்கு புதை படிமங்கள் மீது அதிக ஆர்வம் வந்தது” என்றார்.

அஸ்வதா பிஜு, புதை படிவங்கள் தொடர்பான பொருட்களை சேகரித்து வைப்பதிலும், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறாள். இதுவரை அஸ்வதா, 75 விதமான புதைப்படிவ பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறாள். அதற்காக ஒரு தனி அறையை இவளுக்கென ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

தான் சேகரித்து வைத்திருக்கும் பொருள்கள் தொடர்பாக விவரங்களைச் சேகரித்து, அதை புகைப்படங்களாகவும் விவரக் குறிப்புகளாகவும் எழுதி, பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கருத்தரங்குகளில் காட்சிப் படுத்தியிருக்கிறாள். புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முன் தான் சேகரித்து வைத்த பொருள்களைக் குறித்துக் காட்டி, விளக்கங்களை அளித்து, அவர்களிடம் இருந்தும் மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்.
இந்தப் புதைப்படிவப் பொருள்களின் மூலம், உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தி வருகிறாள் அஸ்வதா பிஜு. அவளது துடிப்பான ஆர்வத்தைப் பாராட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.