
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக., தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
பாஜக., தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக., தனித்துப் போட்டியிடுகிறது. வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் அதிமுக., கூட்டணி இல்லாமல் பாஜக., போட்டியிடுகிறது. இந்த முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
தேசிய அளவில் அதிமுக., உடனான கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியாக தொடரும். அடுத்த 15, 20 நாட்கள் கடினமாக உழைத்து இல்லம் தோறும் தாமரையை மலரச் செய்ய வேண்டும். அதிமுக., உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக., – பாஜக., இணைந்தே தேர்தலை சந்திக்கும். அதிமுக., தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய உந்துசக்தி. பாஜக.,வின் எல்லா திட்டங்களுக்கும் அதிமுக., உறுதுணையாக இருந்தது. 2021 தேர்தலில் முழு ஒத்துழைப்பு கொடுத்தது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதே பாஜக.,வின் நிலைப்பாடு. முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை கேட்டோம். ஆனால் பாஜக., கேட்ட இடங்களை அதிமுக., தரவில்லை.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் சில சங்கடங்கள் இருந்தன. பாஜக., அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும்.
எங்களின் பொது எதிரி திமுக.,! அவர்களின் 8 மாத கால ஆட்சியை மையப்படுத்தியே எங்களது பிரசாரம் இருக்கும். திமுக., ஆட்சியில் மக்களுக்கு செய்யாத திட்டங்களை வீடுவீடாக எடுத்துச் செல்ல இருக்கிறோம். .. என்று கூறினார் அண்ணாமலை.
இதனிடையே அண்ணாமலையின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பாஜக., தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனியாகக் களம் இறங்கப் போகிறது! தமிழகத்தில் பாஜக உண்மையாக வேரூன்றி பெரிய ஆலாகத் தழைக்கப் போகிறது என்பது உறுதி!
நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலில் கூட கூட்டணியை சில காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உலகத்திலேயே மிகப் பெரிய கட்சி உள்ளாட்சித் தேர்தலில் இன்னொரு கட்சியின் தலைமையில் களமாடுவது என்பது தன்னம்பிக்கை இல்லாத பயில்வான் போல.
அதனால் தான் திராவிடக் கட்சிகள் எப்பொழுதுமே பிற கட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மிக மிக சொற்பமான இடங்களை ஒதுக்கி, எப்பொழுதுமே ஒடுக்கியே வைத்திருக்கும். காங்கிரஸுடன் நாடாளுமன்ற கூட்டணியில் 25-30 எம்பி தொகுதிகளை ஒதுக்கிய காலங்களில் கூட உள்ளாட்சித் தேர்தலில் 10% இடம் கூட ஒதுக்காமல் பார்த்துக் கொள்ளும். உள்ளாட்சித் தேர்தலில் அடக்கி அடக்கியே தேசிய கட்சிகளை தமிழகத்தில் வளராமல்/ தேய்ந்து போகும்படி செய்து விட்டன.
ஆகையால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்ற செய்தி பாஜகவிற்கு அரசியல்ரீதியான மிகப் பெரிய நகர்வு. இந்தத் தேர்தலில், வெற்றி தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம். அடிமட்ட கட்டமைப்பு இல்லாமல் எந்தவொரு கட்சியும் ஓர் இடத்தில் வளரவே முடியாது. ரொம்ப ரொம்ப காலதாமதமான முடிவு தான் என்றாலும், இப்பொழுதாவது இந்த முடிவினை எடுத்த தமிழக பாஜக தலைமைக்கு வாழ்த்துகள்! சிறப்பு வாழ்த்துகள் Annamalai Kuppusamy ஜி!
முடிவெடுப்பதில் அண்ணாமலை சிறு தயக்கம்/தடுமாற்றத்தில் இருக்கலாம். எனவே, பாஜக ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது, “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்போம்” என்று (அவரவர் ஸ்டைலில்) பதிவு போட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் பண்ணுங்க. ஆதரவாளர்களின் மனநிலையை அவரிடம் கொண்டு சேர்ப்போம். அவருக்கு தனித்து நிற்கும் மன உறுதியை அதிகப்படுத்துவோம். சுயபரிசோதனைக்குத் தயாராகுங்கள் அண்ணாமலை ஜி.
– ஆனந்தன் அமிர்தன்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி சபாஷ் ஐயோ பாவம் இதுவரை நம்மை சொல்லியே தப்பித்து வந்த அதிமுக ரிசல்ட் வந்த பிறகு என்ன காரணம் சொல்லப்போகுதோ தன்னை காப்பாற்றிக் கொள்ள!
– ராஜா ஸ்ரீவி.,