
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.
கொரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், உலகம் முழுவதுமுள்ள லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை மேற்கொள்ளத் தொடங்கினர்.
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழும் லதா மங்கேஷ்கர், 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர்.
இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு தசாப்த கால இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்கமுடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர்கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் ‘மெலடி குயின்’ என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார்.
இந்தியாவின் நைட்டிங்கேலாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் தனது தந்தையிடம் இளம் வயதிலேயே இசை கற்றுக்கொண்டார். கடந்த 1942ம் ஆண்டு முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் திடீரென தந்தை இறந்ததால் அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளானது.
அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்.
இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. தந்தை இறந்த பிறகு மும்பை வந்த லதா மங்கேஷ்கர் 80 ஆண்டுகளாக இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
தமிழில் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் ‘வளையோசை’ பாடல் மிகப் பிரபலமானது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி கோவிந்த் உட்பட பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
1974-ம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவரின் 90வது வயதில் இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.
லதா மங்கேஷ்கரின் மரணம் இசைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் அஞ்சலிக்காக லதா மங்கேஷ்கர் உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
I consider it my honour that I have always received immense affection from Lata Didi. My interactions with her will remain unforgettable. I grieve with my fellow Indians on the passing away of Lata Didi. Spoke to her family and expressed condolences. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 6, 2022





