teacher - 2026

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

சற்றுமுன் கல்வி தமிழகம்
teacher - 2026

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலருக்கு மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் “சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடக்கக் கல்வித்துறை தவிர மாநகராட்சிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்கக்கல்வித்துறையில் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக ஆசிரியர் பணி அனுபவம் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த 2021 பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5% உள்ஒதுக்கீடு செய்து தீர்ப்பு வழங்கியது.

எனவே, மேல்நிலை கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் உரிய திருத்தங்கள் செய்து தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.