Dhinasari Home page

திருநள்ளாறு ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் திருவிழா துவக்கம்

சற்றுமுன்

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் மாசி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இக் கோயில் மாசி திருவிழா  கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடிக்கம்பம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார். காலை 10.30 முதல் 11.30 வரை பட்டாச்சாரியர்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில்  கருடக் கொடியேற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்ச்சியாக மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும் மாலை  ஹம்ச வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பாடும், சனிக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை கருடசேவையாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்படுகிறது.

நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை காலை தேரில் பெருமாள் நளதீர்த்தம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் திருக்கல்யாண உத்ஸவமும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. 

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலை சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில், பிரபலமான ஸ்தலமாக விளங்குகிறது.இங்கு நளநாராயண பெருமாளையுமஅ ஸ்ரீ திரிநேத்ர பஞ்சமுக வீர ஆஞ்சநேயரை வழிபட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.