தென்னகத்து ஊட்டி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சியில் முதல்முறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
தென் மாவட்டங்களின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் மணிமுத்தாறு பேரூராட்சியில் அமைந்துள்ளது. 15 வார்டுகளைக் கொண்ட மணிமுத்தாறு பேரூராட்சியில் 9,10,11,12,13 ஆகிய 5 வார்டுகள் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் அமைந்துள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் 10 உறுப்பினர்களும் அதிமுக மற்றும் சுயேட்சைகள் 4 உறுப்பினர்களும் தேர்வாகினர். மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ஆதிதிராவிடர் (பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. மாஞ்சோலை 10ஆம் வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அந்தோணியம்மாள் தலைவர் பதவிக்கு திமுக தலைமை அறிவித்தது. மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட வரலாற்றில் 90 ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளிகளில் முதல் பேரூராட்சித் தலைவராக அந்தோணியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுக.,வால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் சபினாவின் மனு, முன்மொழிபவர் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக சார்பில் வேறொரு வேட்பாளரும், அதிமுக சார்பில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக, திமுக வேட்பாளர்கள் தலா 9 ஓட்டுகள் வாங்கிய நிலையில் குலுக்கல் முறையில் பேரூராட்சி தலைவர் பதவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி தேர்வு செய்யப்ப்டு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தலா 15 ஓட்டுகள் பெற்று சமநிலையில் இருந்ததால், குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா மகேஷ்வரி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் தேர்வானார்.
ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுதா அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
தென் காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேரும், புதன் கிழமை கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத்தேர்தல் வெள்ளிக்கிழமை பேரூராட்சி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக 6 வது வார்டு கவுன்சிலர் உமாதேவி கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக 7 வது வார்டு கவுன்சிலர் சுதாவும் தலைவர் பதவிக்கு மனு செய்திருந்தார். இதனால் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அதிகாரி பொன்னுசாமி முன்னிலையில் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டதில் 8 வாக்குகள் பெற்று சுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக தலைமை அறிவித்த உமாதேவி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றது ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் நகராட்சியில் போட்டி திமுக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் திமுக அதிகாரப் பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்ற திமுக போட்டி வேட்பாளர் வெற்றி பெற்றார்
திமுக அறிவித்த வெண்ணிலாவுக்கு 10 வாக்குள் கிடைத்தது. எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பரிமளா 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மணப்பாறை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் பதவியை 11 உறுப்பினர்களை கொண்ட அதிமுக 15 வாக்குகள் பெற்று கைப்பற்றியுள்ளது. 53 ஆண்டுகளாக திமுக கோட்டையாக இருந்த மணப்பாறை நகராட்சியில் முதன் முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியின் 7-வது நகர்மன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து, மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 11, அதிமுக 11 என சமபலத்ததுடன் இருந்த நிலையில், திமுக கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்காது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 நபர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை அவர்களாகவே முன் வந்து அளித்தனர். இதன் காரணமாக திமுக பலம் 16-ஆக உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலரும், நகராட்சி ஆணையருமான எஸ்.என்.சியாமளா முன்னிலையில் நடைபெற்ற நகர்மன்ற தலைவருக்கான முறைமுக தேர்தலில் திமுக சார்பில் 25-வது வார்டு உறுப்பினர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், அதிமுக சார்பில் 18-வது வார்டு உறுப்பினர் பா.சுதா ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் நடைபெற்ற வாக்களிப்புக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த பா.சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், 12 வாக்குகள் பெற்று கீதா ஆ.மைக்கேல்ராஜ் வெற்றியை வாய்ப்பை நழுவவிட்டார் எனவும் அறிவிக்கப்பட்டது. 11 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அதிமுக 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 16 உறுப்பினர்களை கொண்ட திமுக தோல்வியை தழுவியுள்ளது. இதில் 1969 முதல் மணப்பாறை நகராட்சியில் 53 ஆண்டுகளாக கோலூச்சி வந்த திமுக கோட்டையை தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது. முன்னதாக 4 முறை நேரடியாகவும், ஒரு முறை கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைமையிலும் நகர்மன்ற தலைவர் பதவியை தக்கவைத்திருந்த திமுக தற்போது நகர்மன்ற தலைவர் பதவியை இழந்துள்ளது மணப்பாறை நகராட்சியில் திருப்புமுனையாக உள்ளது.








