தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.மிக முக்கிய நிகழ்வாக வரும் ஏப்9இல் தேரோட்டம் நடைபெறும்.
இன்று குற்றாலநாதர் குழல்வாய் மொழி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதிகாலை கோயில் முகப்பில் உள்ள கொடிமரத்தில் வேதபாராயண முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் வீதியுலா நடைபெறும்.
விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், திருக்கோயில் முருகன், விநாயகா் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில் 4-ம் நாளான ஏப்ரல் 8-ம் தேதியன்று பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, ஏப்ரல் 9-ம் தேதியன்று தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏப்ரல் 11-ம் தேதியன்று காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 12-ம் தேதியன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 14-ம் தேதியன்று சித்திரை விசுத்தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
