சொத்துவரி உயர்வு,சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை உயர்வோடு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல நாளை புதன்கிழமை முதல் வாகன நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கொடைக்கானல் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டுகளிக்கலாம்.
கொடைக்கானலிலிருந்து பேரீச்சம் ஏரிக்குப் போகும் வழியில் உள்ளது மதிகெட்டான் சோலை. இச்சோலையில் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றால் பயணிகள் சுயநினைவை இழக்கிறார்களாம். காரணம், இப்பகுதியில் அரியவகை மூலிகைகள் மிகுந்திருப்பதாகவும் சில பேருக்கு அதைச் சுவாசிப்பதால் மயக்கம் ஏற்படுகிறது என்றும் சொல்கின்றனர் அவ்வூர் மக்கள்
தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஏரிகளில் அழகுடன் திகழ்வது பேரீச்சம் ஏரி. நட்சத்திர வடிவில் 24 ஹெக்டேர் பரப்பிலுள்ள இந்த ஏரியிலிருந்துதான் பெரியகுளத்துக்குக் குடிநீரே போகிறது.
மேலும் ஏரியை சுற்றி பார்ப்பது புது அனுபவமாக இருக்கும். பேரிஜம் ஏரியை சுற்றி பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறையினரிடம் நுழைவு கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்று வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதற்காக ஏற்கனவே சிறிய ரக வாகனத்திற்கு ரூ.200-ம், பெரிய வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நாளை புதன்கிழமை முதல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு சிறிய ரக வாகனத்திற்கு ரூ.300-ம், பெரிய வாகனத்திற்கு ரூ.500-ம் வசூல் செய்யப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கான நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா வாகனங்களின் பயண கட்டணமும் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியடைய செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
