images 36 - 2026

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் ..

சற்றுமுன்

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும் மேலும் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதனால் அ.தி.மு.க.வை அவரால் வழிநடத்தி செல்ல இயலவில்லை.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேலும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையமும் அவர்களது தேர்வை ஏற்றுக்கொண்டது.

இதை எதிர்த்து சசிகலா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் 1.11.2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் அது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறி இருந்தார்.

பொதுச்செயலாளராகிய நான் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதமானது. எனவே இவர்கள் கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

சசிகலா மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில் அ.தி.மு.க. இணைந்ததால் தேர்தல் கமி‌ஷனில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதற்கு சசிகலா தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் இறந்துவிட்டார். டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்க முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிபதி வராததால் தீர்ப்பு அளிப்பது தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும் மேலும் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

images 36 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.