சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள உலகளவில் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நாளை ஏப் 14ல் தீர்த்தவாரி நிகழ்வு விமர்சையாக நடைபெறும்.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை 10:30 மணியிலிருந்து காலை 11:30 மணிக்குள் கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மாலையில் 6:30 மணிக்கு புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு.பல பெருமைகளை கொண்ட பிள்ளையார்பட்டியில் ஆவணி சதுர்த்தி திருவிழாவுக்கு அடுத்து தமிழ்புத்தாண்டு தீர்த்தவாரியும் பஞ்சாங்கம் வாசித்தலும் பிரபலமானதாகும்.





