மதுரையில் இன்று நடந்த சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழச்சியில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்ததால் கூட்டநெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலர் காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.
மதுரையில் இன்று நடந்த சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 6 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் இறங்கினார். இதைக்காண மக்கள் முண்டியடித்தனர். ஆற்றுக்குள் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு கள்ளழகர் மண்டபத்துக்கு திரும்பிய நிலையில் அங்கு சாமியைக் காண மக்கள் முன்னேறியபோது நெரிசல் ஏற்பட்டு பலர் தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் கதறலும் ஏற்பட்டது.
உடனே காவல்துறையினர், தன்னார்வலர்கள் வந்து கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண், ஒரு ஆண் என இருவர் உயிரிழந்தனர். இவர்கள் யார் என்ற அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 11 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பதற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினர் .
இந்நிலையில் மரணமடைந்துள்ளவர்களை பற்றி விவரம் தெரிந்தவர்கள் 9498042434 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
4,000 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டும், பல முன்பேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டும் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்து விட்டதே என்று வந்திருந்த பக்தர்கள் ஆதங்கம் பட்டனர்.
கள்ளழகர் திருவிழா கூட்ட நெரிசலில் மரணமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்ததாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதனிடையே, பலியானவரில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்று தெரியவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்து வருவதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அழகர் வைபவத்தை காணும் போது சிலர் முண்டியடித்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில்பலர் காயமடைந்ததாக பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனையில் ஆயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை விபரங்களை கேட்டு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க கூறினர்.






