ஒரு நாள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரூ158மதிப்பிலான திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமானம் நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து 10.20 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு சென்று, அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
10.40 மணிக்கு அரவிந்தர் ஆசிரம் சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்டு காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.
பின்னர் மதியம் 12.40 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்த அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
பின்னர் மதியம் 1.55 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு 2 மணிக்கு கம்பன் கலையரங்கத்தில் நடக்கவுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது இசிஆரில் ரூ.70 கோடியில் புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குமரகுருபள்ளத்தில் ரூ.45 கோடியில் 13 அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையை ரூ.30 கோடியில் அகலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் கம்பன் கலையரங்கில் இருந்து புறப்பட்டு அமித்ஷா 3.45 மணிக்கு சித்தானந்தா நகரிலுள்ள பாஜக அலுவலகம் வந்துஅங்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகினார். அமித்ஷாவின் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.







