தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டது அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தேர் திருவிழாவில் இன்று மின் விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தது குறித்து சட்டசபையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, திருவிழாவின் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவில்லை எனக் கூறி சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தஞ்சாவூர் தேர் திருவிழாவின் போது உயரழுத்த மின்சார கம்பியில் உரசியதால் 11 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங்களை உயர்த்தி தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளேன்.
தேர் இழுக்கும்போது உயரழுத்த மின்சாரங்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் விபத்து ஏற்பட்டுள்ளது. தேர் விபத்துக்கு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போதும் அரசு முறையான பாதுகாப்பு செய்யாததால் கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவிழா காலங்களில் இந்த அரசு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், பாதுகாப்பு அளிக்க தவறுவதால், தஞ்சாவூரில் 11 உயிர்களை இழந்துள்ளோம். தேர் திருவிழாவின் மின் விபத்துக்கு அரசு சரியான திட்டமிடல் செய்யாததே காரணம். இதனை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் அத்திவரதர் தரிசனத்தின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.






