ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நாளை காலை நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறார். இதையடுத்து அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடையும்.
இதற்கிடையே ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. நேற்று தஞ்சை களிமேடு பகுதியில் நடைபெற்ற அப்பர் கோவில் திருவிழாவில் தேரோட்டத்தின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் பலியானார்கள்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அந்த பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த பகுதியில் தயார் நிலையில் மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறையினர் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.





