ரம்ஜான் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் கோடிகளில் விற்பனை ஆகிவருகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் இன்று அன்னூர் சந்தையில் திரண்டுள்ளனர்.வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சந்தையில் குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகுடன் சற்று எடை அதிகம் உள்ள ஆடு ஒன்று 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல சந்தையில் நாட்டுக்கோழிகள் மற்றும் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மேல் விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த வாரமும் ஒரு கோடிக்கு மேல் விற்பனையாகி வருகிறது
செஞ்சி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஆடு விற்பனை கூடுதலாக நடைபெற்றது. கிராமங்களிலிருந்து விவசாயிகள் அதிகாலையிலேயே ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு என விற்பனைக்கு வந்தனர். இந்த ஆடுகளை வியாபாரிகள் லாரி மற்றும் வேன்களில் வந்தவர்கள் ஆடுகளை கொள்முதல் செய்தனர்.
சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ. 4 கோடி மதிப்பில் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது. கர்நாடக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுவாங்க வந்திருந்து ஆடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.

