சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்காக இலங்கையில் உள்ள பல்வேறு நீதிமன்றத்தில் இன்று மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், விடுவிக்கப்படும் படகுகளை பொறுப்பேற்பதற்காக, ராமேஸ்வரம் மீன் துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை ஆய்வாளர் ஆகியோர் படகு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட அதிகார ஆவணங்களுடன் இலங்கைக்கு தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களின் 81 மீன்பிடிப் படகுகளும் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து இப்படகுகளை தமிழகத்திற்கு கொண்டுவர ஏதுவாக சுமார் 150 மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுக்கள் மீட்புப் படகுகளுடன் இந்திய அரசின் அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மீட்புக் குழுக்கள் 81 படகுகளில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளை நீக்கி, இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தமிழகம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந்த மீட்புக் குழு மற்றும் மீட்புப் படகுகள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள 81 மீன்பிடிப் படகுகளை தமிழகம் கொண்டு வருவதற்கான எரியெண்ணெய், உணவு மற்றும் பழுது நீக்க செலவு ஆகிய அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்கும் என அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இது தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞரை நியமித்து வாதாடுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையிலிருந்து படகுகளை திரும்பக் கொண்டுவரும் செலவு: தமிழக அரசு ஏற்பதாக அறிவிப்பு
Popular Categories



