நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர்.புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜினி தனது புதிய கட்சியை தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து கட்சி பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளார்.
புதிய கட்சி தொடர்பாக ரஜினி தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது அவருடைய கவனம் முழுக்க கட்சிக்கு சுமார் 1 கோடி தொண்டர்களை திரட்ட வேண்டும் என்பதில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசி வருகிறார்.
புதிய கட்சி அறிவித்த பிறகு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் ரஜினி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கட்சியை தொடங்கும் போதோ அல்லது அதற்கு பிறகோ மாநில அளவில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் ரஜினிக்கு கோரிக்கை வந்துள்ளது. இதை ஏற்றுக் கொண்டுள்ள ரஜினிகாந்த் தனது கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.



