கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் தலைகாட்ட துவங்கி விட்டது. கோயம்புத்தூரில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனைகளில் 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகளுக்கு தொண்டையில் கடுமையான வலி ஏற்படும். உணவு அருந்தும்போது வலி ஏற்பட்டு, விழுங்க சிரமம் ஏற்படும்.
சருமத்திலும், தாடையிலும் தக்காளி நிறத்தில் சிறு சிறு திட்டுகள் வரும். இதுதான் இந்த தொற்றுக்கான அறிகுறியாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும் தன்மை கொண்டது.
கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.
அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து கோவை வரும் பயணிகளுக்கு இரு மாநில எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. வேகமாகபரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாநகரில் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் குழந்தைகள் சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. அறிகுறிகளுடன் வருபவர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியபோது,
தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் இதுவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிமைப்படுத்தும் மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.
பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 7 நாட்களில் இது சரியாகிவிடும். அறிகுறிகள் தென்பட்டவுடனே வெந்நீர் அருந்த வேண்டும். ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பை உணர்ந்தால் மருத்துவர்களை நாட வேண்டும் என்றனர்.கோவையில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து தமிழக கேரளா எல்கையான செங்கோட்டை புளியறை,களியக்காவிளை,குமுளி பகுதியில் மருத்துவ சோதனைகளை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






