பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையின்போது, இளவரசி சார்பாக வாதிடுவதைவிடுத்து ஜெயலலிதா சார்பாக வாதிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று இளவரசி வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கண்டிப்பு தெரிவித்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையிலான பெஞ்சில் நடந்து வருகிறது. ஏ-1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் ஏ-2 குற்றவாளியான சசிகலா ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இளவரசி தரப்பு வாதம் இருதினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இளவரசி சார்பாக, வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டு வருகிறார். இவர் பெரும்பாலும், சொத்துக் குவிப்பு வழக்கிற்கு ஆதாரம் இல்லை, ஜெயலலிதாவுக்கு தொடர்பு இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைத்து வந்தார். இந்நிலையில், நீதிபதி குமாரசாமி இன்று பொறுமை இழந்து வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டார். நீதிபதி கூறுகையில், “ஊழல் வழக்குகளில் எதை ஆதாரமாக கொண்டு வாதிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆதாரமே இல்லாமல் ஊழல் வழக்கை பதிவு செய்ய முடியுமா? அப்படியே பதிவு செய்தாலும், அதுதான் 18 வருட காலம் நடைபெற முடியுமா? உங்கள் கட்சிக்காரர் மீது கூட்டு சதி செய்ததாகவும், குற்றத்திற்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள். அதைவிடுத்து, ஜெயலலிதா சார்பில் வாதிடுவது ஏன்? நீங்கள் இளவரசி தரப்புக்கு மட்டும் வாதிடுங்கள். வழக்கில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளவரிடமிருந்து, 2வது மற்றும் 3வது எதிரிகளின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த வங்கி பண பரிமாற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் தாருங்கள். அதைவிடுத்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்… என்றார்.
Popular Categories



