கோடை விழாயொட்டி உதகை ரோஜா பூங்காவில் தொடங்கியுள்ள 17வது ரோஜா கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 17வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. 17வது உதகை ரோஜா காட்சியின் சிறப்பம்சமாக சுமார் 31,000 வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயரத்தில் மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை கவரும் விதமாக கார்டூன் கதாபாத்திர வடிவமான மோட்டு-பட்லு, மான், ப்யானோ மற்றும் பனி மனிதன் போன்ற வடிவங்களும், தமிழக அரசின் புதிய திட்டமான மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த, மஞ்சப்பை போன்ற வடிவங்களும் சுமார் 50,000 ரோஜாக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்காட்சியில் இதர மாவட்டங்களான நெல்லை, திருப்பூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறையினரால் ரோஜா மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை குதுகலிக்கும் விதமாக தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 17வது ரோஜா காட்சி நேற்றும், இன்றும் என இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.