ஜூன் 10ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 57 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது. இதில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம்தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன.
அ.தி.மு.க., சார்பில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார், நவநீதகிருஷ்ணன், தி.மு.க., சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஷ்குமார் ஆகிய 6 பேர் பதவி காலியாகிறது. தற்போது நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு 4 எம்.பி.,க்களும், அ.தி.மு.க., வுக்கு 2 எம்.பி.,க்களும் இடம் பெற உள்ளனர். அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தற்போதுள்ள எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணிக்கு நான்கு எம்.பி க்கள் கிடைப்பர்.அ.தி.மு.க., கூட்டணிக்கு இரண்டு எம்.பி.பதவி கிடைக்கும்.இந்நிலையில் திமுக 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ள தி.மு.க., மற்ற 3 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவுள்ள இரண்டு இடங்களுக்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறுவதற்கு அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி உருவாகி உள்ளது.
அ.தி.மு.க., சார்பில் கிடைக்கவுள்ள இரண்டு பதவிகளுக்கு, வேட்பாளர் தேர்வு செய்து இன்று அறியப்படும் என தெரிகிறது.





