மதுரையில் டாக்டராகும் ஆசையில் நீட் தேர்வு எழுதிய 56 வயது விவசாயியால் தேர்வு மையம் பரபரப்பானது.
மதுரை மாடக்குளம், சக்தி நரை சேர்ந்தவர் ராஜ்யக்கொடி (56) விவசாயி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன்கள் சக்திபெருமாள், வாசுதேவா உள்ளனர். சக்தி பெருமாள், காண்ட்ராக்டராக உள்ளார். 2-வது மகன் வாசுதேவா, கடலூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விவசாயி ராஜ்யக் கொடிக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 1986-ம் ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதினார். இதில் அவருக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு கல்விக் கட்டணம் செலுத்த, பணம் இல்லை. எனவே ராஜ்யக்கொடியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை.
இருந்தபோதிலும் அவருக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ராஜ்யக்கொடி நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஹால் டிக்கெட் வந்து சேர்ந்தது. அவர், ஹால் டிக்கெட்டுடன் மதுரை அனுப்பானடி ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் நீட் தேர்வு மையத்துக்கு இன்று காலை வந்தார். அவரது ஹால் டிக்கெட்டை சரிபார்த்த அதிகாரிகள், தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ்யக்கொடி, நீட்தேர்வு எழுதினார்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. 497 நகரங்களில் தேர்வு நடந்தது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, உள்பட 18 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 59 மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு எழுதுவதற்காக மையங்களில் மாணவ-மாணவிகள் குவிந்தனர். காலையிலேயே பெற்றோருடன் மாணவர்கள் மையங்களின் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். காலை 11.40 மணி முதல் தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
