
இந்தியா மேற்கு இந்திய தீவுகள் மூன்றாவது ஒருநாள் போட்டி
ஷுப்மன் கில் அபார ஆட்டம்
– K.V. பாலசுப்பிரமணியன் –
இந்திய அணி (225/3, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 98, தவான் 58, ஷ்ரேயாஸ் ஐயர் 44, வால்ஷ் 2/57) மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (137, நிக்கோலஸ் பூரன் 42, கிங் 42, சாஹல் 4/17) டக்லஸ் லூயிஸ் முறையில் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒரு மாற்றம். ஆவேஷ்கானுக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் இடம் பெற்றார். தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பொறுமையாக ஆடி 22 ஓவரில் 112 ரன் சேர்த்தனர். 23ஆவது ஓவரில் தவான் வால்ஷ் வீசிய பந்தினை சரியாகக் கணிக்காமல் ஆடி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவர் இறுதியில் மழை பெய்யத் தொடங்கியது.
கிட்டதட்ட இரண்டு மணி நேரம் இதனால் ஆட்டம் தடைபெற்றது. பின்னர் 40 ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. கில், ஷ்ரேயாஸ் இருவரும் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். 33ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் (44) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.
36ஆவது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிட்டது. எனவே 36 ஓவர்களுடன் இந்திய அணியின் ஆட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஷுப்மன் கில் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரால் சதம் அடிக்க முடியவில்லை. அச்சமயத்தில் மே.இ. தீவுகள் அணி 35 ஓவரில் 257 ரன் அடிக்கவேண்டும் என டக்லஸ்-லூயிஸ் முறைப்படி முடிவானது.
தீபக் ஹூடாவின் ஸ்பின் பவுலிங்குடன் இந்திய அணி பந்து வீச்சைத் தொடங்கியது. இரண்டாவது ஓவரின் முதல் மற்றும் மூன்றாவது பந்துகளில் சிராஜ் இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். அதற்குப் பின்னர் ஷாய் ஹோப் (22), பிராண்டன் கிங் (42), நிக்கோலஸ் பூரன் (42) மூவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். சாஹல் தனது இரண்டாவது ஓவரில் ஷாய் ஹோப்பை ஆட்டமிழக்கச்செய்தார்.
அதன் பின்னர் 13 ஓவர் கழித்து மீண்டும் பந்து வீச வந்த சாஹல் தனது மூன்றாவது ஓவரில் கீமோ பால், நாலாவது ஓவரில் வால்ஷ் மற்றும் ஜேய்டன் சியேல்ஸ் ஆகிய இருவரின் விக்கட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
முந்தைய இரண்டு ஆட்டங்களைப் போல இல்லாமல் ஒரு தெளிவான வெற்றியை இந்திய அணி பெற்றது. இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்.