
- முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது
வங்கக் கடலில் உருவாகியிருந்த நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (wellmarked low pressure area) இன்று 06.12.2022 இந்திய நேரப்படி மாலை 0530 மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 1020 கிமீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. (8.2 டிகிரி வடக்கு/88.2 டிகிரி கிழக்கு). இது நாளை மாலைக்குள் புயலாக வலுப்பெறும். இந்தப் புயல் 8.12.2022 காலை வரை மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கடலோரத்தில் நிலைகொள்ளும்.
இதன் காரணமாக 09.12.2022 அன்று தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெரும்பாலான இடங்களிலும், கனமழை முதல் மிகக் கனமழை ஒரு சில இடங்களிலும், அதிகனமழை ஓரிரு இடங்களிலும் பெய்யக்கூடும்.
புயல் காரணமாக 09.12.2022 அன்று தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையிலும் அதிக அளவாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் மாண்டலர் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் 7-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறும் மயிலாடுதுறை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய போலீசார், தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.