
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் இன்று திருபாவரண ஊர்வலம் சுவாமிக்கு திருபாவரணம் சார்த்தும் விழா வும் நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் வேதபாராயண முறைப்படி துவங்கி நடைபெறுகிறது.
கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அடர்ந்த காட்டில் தர்மசாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயப்பனை பிரம்மச்சாரியாகவே பக்தர்கள் அனைவரும் பூஜித்து கும்பிட்டு வருகின்றனர்.
பந்தளத்தில் பச்சிளம் குழந்தையாகவும், குளத்துப் புழாவில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் கையில் வில் அம்புகளை ஏந்திகொண்டு வேட்டைக்காரனாகவும் காட்சியளிக்கும் ஐயப்பன் ஒர் இடத்தில் மட்டும் குடும்பஸ்தனாக காட்சி கொடுக்கிறார். அது தான் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்.
இக்கோயில் பரசுராம மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு மதுரை பாண்டிய மன்னன் இக்கோவிலில் திருப்பணி செய்து தற்போது சபரிமலையில் பிரசித்தி பெற்று வரும் மண்டலபூஜை வழிபாட்டை முதல் முறையாக ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் துவக்கிவைத்தார்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் தணூர் மார்கழி மாதத்தில் தர்மசாஸ்தாவான ஐயப்பனுக்கும் புஷ்கலா தேவிக்கும் கல்யாண உற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த கல்யாண உற்சவ விழாவிற்காக, திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர், சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு உறுப்பினர்கள், சம்பந்தி என்ற முறைப்படி, ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் குலதெய்வமாக வழிபட்டு வரும் மதுரை சவுராஷ்டிர மக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி கௌரவப்படுத்துகின்றனர்.
ஐயப்பனின் ஆறுபடை வீடுகளாக கருதப்படும் முக்கியமான ஆறு ஐயப்பன் ஸ்தலங்களில் இரண்டாவதாக இருப்பது இந்த ஆரியங்காவு ஐயப்பன் கோவில் தான். முருகப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் உள்ளது போலவே, ஐயப்பனுக்கு முக்கியமான தலமாக இந்த ஆரியங்காவு கோவில் விளங்குகிறது.
சுவாமி ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சாரியாகவும் குளத்துப்புழையில் பாலகனாகவும் இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வன அரசனாக அச்சன்கோவிலிலும் காட்சி தருகிறார்.
ஆரியங்காவு கோவில் கேரளா பாணியில் இருந்தாலும் அங்கு நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் ஆரியங்காவு ஐயப்பன் திருமணம் முடித்தது மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா பெண்ணான புஷ்கலா தேவியை.
ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் தர்மசாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலா தேவியுடன் தம்பதி சமேதராக காட்சி கொடுக்கிறார்.
திருவனந்தபுரம்- தென்காசி நெடுஞ்சாலையில் வனப்பகுதியின் நடுவே இக்கோயில் உள்ளது. சபரிமலையைப் போலவே இங்கும் 10 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதினைக்கொண்ட பெண்களை இங்கே அனுமதிப்பதில்லை. தமிழ்ப் பாரம்பரியம் அனுசரித்து இங்கு பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்றன. தேவி, சிவன், சாஸ்தா ஆகியோரின் உருவங்களும் ஸ்ரீகோயிலுக்குள் காணப்படுகின்றன. இடப்பக்கம் தேவியும், வலப்பக்கம் சிவனும், நடுவில் குமர வடிவில் ஐயப்பனும் அமர்ந்துள்ளனர்.
சபரிமலை மண்டலக் கால பூஜை நிறைவடையும் நாளில் இங்கு விழா நடைபெறுகின்றது. பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், கும்பாபிஷேகம் ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களாகும். கொல்லம் – புனலூர் – தென்காசி வழியாகவோ, திருவனந்தபுரம் – தென்காசிப் பாதை வழியாகவோ இக்கோயிலைச் சென்றடையலாம்.ஆரியங்காவில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது முக்கிய ரயில் இங்கு நின்று செல்கின்றன.

இக்கோயில் திருவிழா இன்று முதல் துவங்கி டிச 27வரை நடைபெறும்.இன்று மாலை சுவாமிக்கு திருபாவரணம் சார்த்தும் விழா வும் நாளை முதல் திருக்கல்யாண உற்சவம் துவங்கும்.வரும் டிச 25இல் பாண்டியன் முடிப்பு டிச 26இல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.டிச27இல் மண்டலபூஜை வழிபாடு கும்பாபிஷேகம் நடைபெறும்.
ஏற்பாடுகளை ஆரியங்காவு கோயில் அறிவுரை கமிட்டி செயலாளர் சுஜாதன், தலைவர் ராதாகிருஷ்ணன் பிள்ளை
மற்றும் பொருளாளர் அணி செய்து வருகின்றனர்.ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலா தேவி திருக்கல்யாண விழாவை மேலும் சிறப்புடன் நடத்த ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் குலதெய்வமாக வழிபடும் மதுரை சௌராட்டிர நிர்வாகம் செய்து வருகின்றனர்.
