தென்னாப்பிரிக்காவை எளிதில் வென்றது இந்திய அணி

சற்றுமுன்

wc2015மெல்பேர்ன் உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டத்தில், இன்றைய 13 வது போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வென்றது, முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, முதலாவதாக பேட் செய்யத் தீர்மானித்தது. அதன் படி களத்தில் இறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர் ரோஹித் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் பின்னர் வந்த தவானும், கோலியும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். ஷிகர் தவான், 146 பந்துகளில் 137 ரன் எடுத்தார். அதில் 2 சிக்ஸர், 16 பவுண்டரி அடங்கும். கோலி 60 பந்துகளில் 46 ரன் எடுத்தார். ரஹானே தன் பங்குக்கு 79 ரன் விளாசினார். அதீல் 3 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்தது. 308 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது. ஹசிம் ஆம்லா, 22 ரன் எடுத்தார். டி க்ளாக் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். நடுவரிசையில் டுபிளெசிஸ், டி வில்லியர்ஸ் இணை இணைந்து விளையாடியது. டுப்ளெசிஸ் 55 ரன் அடித்தார். டிவில்லியர்ஸ் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். மில்லர் 22, பானெல் 17 என ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக, 40.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஷமி, எம்.சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.