
சாத்தூர் அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை
சென்ற பக்தர்கள் இருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (49). இவர் அப்பகுதியில் மெஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில் இவரது தலைமையில் சுமார் 30 பேர் திருச்செந்தூருக்கு மாலை அணிந்து நேற்று இரவு பாதயாத்திரை செல்ல கிளம்பியுள்ளனர்.
இந்த நிலையில் பாதயாத்திரை குழு சாத்தூர் புல்வாய்ப்பட்டி விளக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நோக்கி பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டதில் கருப்பசாமி மற்றும் சிவகாசி மீனாட்சி காலனியைச் சேர்ந்த சங்கரன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உயிரிழந்த இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஜெயராஜை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.





